சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து – மசோதா நிறைவேற்றம்!

சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தஞ்சம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. …

சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தஞ்சம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.  எனவே, சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது.  குறிப்பாக,  ஆவணங்களின்றி சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

2022-ல் பிரதமாராக இருநத போரிஸ் ஜான்சன் இதற்கான திட்டத்தை கொண்டு வந்தார். சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வருவோரை தடுக்கவும்,  ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் வணிகத்தை முறியடிக்கவும் ருவாண்டா திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக சட்டப் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த கொள்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது.  புலம்பெயர்ந்தோர் தங்கள் தாய்நாடுகளுக்கு அல்லது அவர்கள் தவறாக நடத்தப்படும் பிற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் இருந்தது.  உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது, புலம்பெயர்ந்தோர் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதை தடுக்கும் வகையில் ருவாண்டாவுடன் ரிஷி சுனக் புதிய ஒப்பந்தம் செய்தார்.

இந்த நிலையில்,  புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதனையடுத்து புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு விமானங்களில் அனுப்பும் நடவடிக்கையை தொடங்க உள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. தஞ்சம் கேட்பவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தை இங்கிலாந்து அரசு மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.  இது சட்டத்தின் ஆட்சியை அச்சுறுத்துவதாகவும், உலக அளவில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கியிருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.