முழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு

முழு நேர அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலின் திரும்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான …

முழு நேர அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலின் திரும்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான  உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

சென்னை துறைமுகம் பகுதி திமுக சார்பில் உடன் பிறப்பே எங்கள் உயிர்ச்சொல் என்னும் தலைப்பில் சுடரொளி நிகழ்ச்சி நடைபெற்றது.

பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 165 தையல் இயந்திரம், 70 லேப்டாப், 550 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை, 9 ஆட்டோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெண்களுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில்  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, “முழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பெரும் இளைஞர் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

சேப்பாக்கம்-திருவில்லிக்கேணி தொகுதி மட்டும் அல்ல; 234 சட்டமன்ற தொகுதியும் உங்கள் தொகுதி தான். ஆகவே இன்னும் வேகமாக நீங்கள் பயணிக்க வேண்டும்.” என்றார்.

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியதாவது:

உதயநிதி ஸ்டாலின் தாத்தாவை போல் வளர்ந்து வளர வேண்டும். உதயநிதி நிச்சயம் தாத்தாவிற்கும் அவரது தந்தைக்கும் பெருமை சேர்ப்பார். உலகம் இருக்கும் வரை கலைஞர் பற்றி பேசிக் கொண்டே போகலாம். கடைக்கோடி தொண்டரை கட்டிப்போடும் ஆற்றல் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

முரசொலி மூலம் அரசியல் நிகழ்வுகளை தினசரி உடன்பிறப்பு கடிதத்தில் கலைஞர் எழுதி விடுவார். உடன் பிறப்புகளுக்கு மட்டும் அல்ல; அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும். பொதுக்கூட்டம் முதல் போராட்டம் வரை அனைத்தையும் கடிதம் மூலம் தொண்டர்களிடம் கொண்டு சேர்த்து விடுவார்.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பொதுவுடைமை பேசாமல் இருக்க முடியாது. அதைத்தான் கலைஞரும் சிறப்பாகச் செய்தார். செருப்பு வீசி அரசியல் நடத்தலாம் என்ற கேவலமான நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது. தனிப்பட்ட தரம் தாழ்ந்த விமர்சனங்களை தமிழ்நாடு ஒரு போதும் செய்தது கிடையாது.

நியாயமான அரசியல் கட்சியாக பாஜக இருந்திருந்தால் உடனடியாக செருப்பு வீசியவனை வன்மையாக கண்டித்து.கட்சியில் இருந்து அந்த நிர்வாகியை உடனடியாக நீக்கி இருக்க வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல நியமிக்கப்பட்டவர். குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட இன்னொரு தலைவர் ரவி போட்டி அரசை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஜாதி மத கலவரத்தை உருவாக்கும் தவறான முயற்சியில் ஆளுநர் ரவி மற்றும் அண்ணாமலை ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூற வேண்டும் என அரசியல் சாசன சட்டத்தில் எழுதியுள்ளதா? என்றார் முத்தரசன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.