“காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இந்தியாவில் யாரும் பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை. ராகுலின் பயணம் எந்த பயன்பாடும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருப்பூரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று மத்திய இணை
அமைச்சர் எல்.முருகன் வருகை தந்தார். இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை
பார்வையிட்டவர் , தொழில் துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும்
பங்கேற்றார். பிறகு பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது:
இந்தியப் பொருளாதாரத்தில் திருப்பூரின் பங்கு முக்கியமானது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனுக்காக தற்போது ESI மருத்துவமனை உருவாக்கப்பட்டு வருகிறது. மே 23 ஆம் தேதிக்குள் அந்த மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம் உள்ளது. மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை நேரடியாக செயல்படுத்தும் பஞ்சாயத்து அமைப்புகளிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படும். தமிழக முதல்வர் அனைத்து தரப்பு மக்களுக்கு சொந்தமானவர். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மற்ற பண்டிகைக்கு எல்லாம் வாழ்த்துகளை பரிமாறுகிறார்கள்.
ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்றவைகளுக்கெல்லாம் ஏன் வாழ்த்து சொல்லவில்லை? என தமிழக மக்கள் கேட்கிறார்கள். பாஜக வேல் யாத்திரை நடத்தியபோது தேர்தல் பயத்தின் காரணமாக வேல் உடன் ஸ்டாலின் வந்தார்.
விமர்சித்தவர், தேர்தலுக்காக அன்று அப்படி வந்தவர். இன்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூட சொல்லாதது வருத்தம் அளிக்கிறது.
நாட்டி உட்கட்டமைப்பிற்காக சுங்கச்சாவடி கட்டணம் ஒப்பந்தப்படி ஏற்றபட்டும் இறக்கப்பட்டும் வருகிறது. திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயருக்கு பதிலாக திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.
ராகுல் காந்தியை இந்தியாவில் யாரும் பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை. ராகுலின் பயணம் எந்த பயன்பாடும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்றார் எல்.முருகன்.
கஞ்சா பயன்பாட்டிற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று அமைச்சர் பொன்முடி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க வேண்டியது தமிழகத்தின் கையில் உள்ள ஒன்று. கஞ்சா முழுவதும் பரவி இருக்கிறது. அதைத் தடுக்க சிறப்புத் திட்டத்தின் மூலம் தமிழக அரசு வர வேண்டும். கஞ்சா போன்ற போதைப் பொருள் பாகிஸ்தானில் இருந்து வருகிறது. அதைதான் பறிமுதல் செய்து மத்திய அரசு மக்களுக்கு வெளிக் காட்டுகிறது” என்றார்.
ஆளுநர் தீர்மானம் குறித்த கேள்விக்கு, “ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் உள்ளது. ஆளுநர் மாநில அரசுகளிடம் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்கிறார்” என்றார் முருகன்.








