கடந்த 5 நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்த பெயர் TTF வாசன். டிடிவி தினகரன் தெரியும், ஜி.கே.வாசனையும் தெரியும், அது யாரு TTF வாசன் என்பதே பெரும்பாலான 90ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களின் கேள்வியாக இருந்தது. ‘இந்த 2k கிட்ஸ் எல்லாம் தனி உலகத்துல வாழ்றாங்கப்பா’ என்று பேசி வந்தவர்கள் எல்லாம் தாங்கள் தான் அப்படி ஒரு உலகத்தில் வாழ்ந்துவருகிறோம் என்பதையும் கடந்த 4 நாட்களில் உணர்ந்துகொண்டார்கள்.
Twin Throttlers எனும் யூ-டியூப் பக்கத்தில் தன்னுடைய பைக் சாகசம் மற்றும் பயண வீடியோ காட்சிகளை பதிவேற்றிவரும் vlogger தான் இந்த TTF வாசன். தன்னுடைய ரசிகர்களையும் யூ-டியூப் followerகளையும் family என்று அழைப்பது இவரின் வாடிக்கை. ஆக Twin throttlers family என்பதின் சுருக்கமே TTF என்று அழைக்கப்படுகிறது.
விலையுயர்ந்த பைக், அதற்கேற்றவாரு ஹெல்மட், ஜாக்கெட் என சகல பொருட்களோடு சாலையில் சாகசப்பயணம் மேற்கொள்வது இவரின் வாடிக்கை. யாரேனும் குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்கூட அவரை ஒருமையில் திட்டுவதோடு ’பளார்’ என கன்னத்தில் அறைவது, அடுத்தவிநாடியே ‘என்ன உங்களோட தம்பியா நினைச்சிக்கோங்கன்னா வாங்க வீட்ல விடுறேன்’ எனக்கூறி பத்திரமாக அவரை கொண்டு வீடு சேர்ப்பது..ரோட்டில் சிறுவர்கள் யாராவது செருப்பின்றி வெயிலில் சென்றால் அவருக்கு செருப்பு வாங்கி கொடுப்பது, பால் பாக்கெட் வாங்கி தருவது, பாதசாரிகளுடன் நட்பாக கணிவாக பழகுவது, யாராவது ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் அவர்களை மடக்கி திட்டி அறிவுரை கூறுவது உள்ளிட்ட அந்த கால எம்.ஜி.ஆர் பாணி சாகசங்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக யூ-டியூப்பில் பதிவு செய்வது இவருது வாடிக்கை.
பொதுவாக 2k கிட்ஸ்களின் கலை, இசை, நடனம், ரசனை என எல்லாவற்றையுமே பெரும்பாலான 90ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்கள் ஒரு ஒவ்வாமையுடன் தான் பார்ப்பார்கள். 2k கிட்ஸ்களின் விதவிதமான கலர் கலரான hair style-களை நகைப்புக்கும் வெறுப்புக்கும் உள்ளாக்கும் 90s கிட்ஸ்கள் பெரும்பாலானோர்கள் ஒரு காலத்தில் காக்க காக்க சூர்யா போல் தலையின் இரண்டு பக்கமும் கோடு போட்டு வீட்டிலும் பள்ளிகளிலும் மிதி வாங்கியவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் மிதிப்பவர்கள் எல்லாம் அதற்கு முந்தைய காலத்தில் funk (ஃபங்க்) கட்டிங் செய்து பங்க் குத்து வாங்கியிருப்பார்கள்..seemore
இசை ரவுடி அனிருத் உள்ளிட்டோர்களின் பாடல்களுக்கு vibe செய்து நடனமாடி வைரல் ஆக்கும் இளசுகளின் இசை ரசனைகளை எள்ளி நகையாடும் பலர் அன்றைய ரஹ்மான் ரசிகர்கள். சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, ராணிபேட்டை பேட்டாராப் என அவர்கள் உருண்டு புரண்ட போதிலும், நோ ப்ளாப்ளமே நோ ப்ளாப்ளம் என மைக்கை பிடித்து கல்ச்சிரலில் ரஹ்மான் ரசிகர்கள் பாடும் போதும் அவர்களை வேற்று கிரகவாசிகள் போல் பார்த்தார்கள் ராஜா ரசிகர்கள். அப்படியே ராஜா சாரின் history-ஐ எடுத்து பார்த்தால், ‘பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா ஹஸ்போடோமி மஸ்படோமியா ப்லிம்பசூமியா..ஹோ ஹோ..(இந்த பாடலை கண்டுபிடிக்கும் 2k கிட்ஸ்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் என்று 80ஸ் kidsகள் சவாலே விடலாம்)’ என பாடலை அமைந்து ரகளை காட்டியிருப்பார்.
நிற்க, இளையாராஜா என்றாலே ‘தென்றல் வந்து தீண்டும்போது’.. கண்ணே கலைமானே என மெலோடியையும் சோக கீதங்களையும் மட்டும் அடையாளப்படுத்தி அவரை முற்றும் துறந்த மெலோடி இசையமைப்பாளர் போல ஆக்கிவிட்டனர். youtube-ல் ilayaraja comical songs, ilayaraja disco song, ilayaraja rock songs என்று தேடிப்பார்த்தால் அனிருத்துக்கு tough கொடுக்கும் பல ரகளையான சம்பவங்களை செய்திருப்பார் நம் ராஜா சார். எல்லா காலகட்டத்திலுமே குறும்புத்தனமான, சிறுபிள்ளைதனமான கலை வடிவங்களையும், விளையாட்டுத்தனங்களையும் நாம் கொண்டாடியே வருகின்றோம்.
அந்த சூழ்நிலைகளுக்ககேற்ப நமக்கு வாய்க்கப்பெற்ற கொண்டாட்டங்களுக்கும் அது தொடர்பான நியாபகங்களுக்கும் nostaligic memories,90s கிட்ஸ் மெமரிஸ் என ஒரு அழகான ஆடை போர்த்தி சிறப்பு செய்கிறோம். ஆனால் தற்கால இளைஞர்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தொழில்நுட்பங்களையும், பொருட்களையும் கொண்டு தங்களுக்கு பிடித்த ஒன்றை செய்யும் போது மட்டும் இதெல்லாம் ஒரு enjoyment-ஆ என பலரும் ஒவ்வாமை கொள்கிறார்கள். வடிவேலு ஒரு காமெடியில் ‘எனக்கு சரக்கு கிடைக்காத ஊருல யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என்று மல்லுக்கட்டுவார் அல்லவா அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!
வண்டியில் சாகச விளையாட்டு செய்வது தொன்றுதொட்டே இருந்துவருவது தான். பொங்கல் திருவிழாவின் போது தட்டு வண்டி ரேஸ், ரேக்ளா ரேஸ் விதவிதமான வண்டிகளில் மாட்டை கட்டி ரேஸ் விடுவது இப்போதும் தொடர்வதை பார்க்கிறோம். இன்றைக்கு இருக்கும் ரோடுகளும் அதிக cc என்ஜின் பைக்குகளும் அந்த கால இளைஞர்களிடம் சிக்கியிருந்தாலும் இதே நிலைதான் தொடர்ந்திருக்கும் எனும்போது மொத்த பழியையும் தூக்கி 2k கிட்ஸ்களிடம் போடுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. race பைக்குகளையே விரும்பாத பல 2k கிட்ஸ்களையும் நம்மால் பார்க்கமுடியும்.
இப்போது TTF-க்கு விவகாரத்திற்கு வருவோம். தன்னுடைய youtube follower-களிடம் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டணும், குடிச்சிட்டு ஓட்டக்கூடாது, என்னமாதிரி வேகமா வண்டி ஓட்டக்கூடாத என கூறுவதைப்பார்க்கும் போது நிச்சயம் சுவாரஸியம் நிறைந்தவராகவே காட்சியளிக்கிறார். அவருக்கு இத்தனை followerகள் இருப்பது ஆச்சரியமே இல்லை என்றே இவைகள் தோன்றவைக்கின்றன. அப்படிப்பட்ட வாசன் போகிற போக்கில் செய்யும் ஒரு நம்பியார் வேலைதான் பைக்கில் அதிவேகமாக செல்வது. இப்படி அண்டாவை மாற்றி மாற்றி சுற்றுவது எல்லா தலைமுறை kids-களுக்கும் பொதுவான ஒன்றுதான். ஜூராஸிக் பார்க் படத்தில் ‘ யாரும் கத்தாதீங்க அந்த மிருகம் நம்மல கடிச்சிரும்..” என்பதையே ஒரு கத்தி கத்தி சொல்லுவார் அல்லவா அதையேதான் வாசனும் செய்கிறார்.
National high way சாலையில் அதிகபட்சமாக 247கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அதை வீடியோவாக பதிவேற்றுகிறார் வாசன். ‘highway-வ பார்த்த முறுக்கனும் போலவே இருக்கே..சரி வாங்க ஆனது ஆகட்டும் பாத்துக்கலாம்’ என்றவாரே இஷ்டத்தும் முறுக்கிக்கொண்டு பறக்கிறார். வண்டி அவரின் கட்டுப்பாட்டையும் தாண்டி ஆடுகிறது. அவரின் பைக்கானது சாலையில் வைக்கப்பட்டிருக்கும் Traffic cone-இல் பட்டால்கூட தாறுமாறாக விபத்துக்குள்ளாவது உறுதி. அந்த வேகத்திற்கு எதிரே செல்லும் காரில் மோதினால்கூட இரண்டு தரப்புமே சுக்குநூறாகிவிடும் போலத்தான் தெரிகிறது. பலரும் sound sensitivity இருக்கும். நொடிப்பொழிதில் சடாரென வண்டியில் பறக்கும் சத்தத்தாலும் அதிர்வுகளாலும் கூட அந்த வகையினர் கண நேரத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகக்கூடும். அதிவேகத்தால் ஏற்படும் விபத்துகள் குறித்து இப்படி பல possibility-களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்று தான் வேகக்கட்டுப்பாட்டை நிர்ணயித்துள்ளது அரசு. அதன் express way-இல் அதிகபட்சம் மணிக்கு 120 கிலோமீட்டரிலும், highway-யில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்திலும் மட்டும் தான் செல்லமுடியும். தன்னுடைய followerகளுக்கு அத்தனை அட்வைஸ் செய்யும் வாசன், ரோட்டில் யாராவது குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் அறச்சீற்றம் கொள்ளும் வாசன்களுக்கு இந்த குறைந்தபட்ச பொறுப்பும் புரிதலும் கூட இருக்க வேண்டாமா என்பதே பலரின் நியாயமான கேள்வியாக இருக்கிறது. வாசனின் இந்த பொறுப்பற்ற தனத்தால் அவருடைய followers-களும் இதேபோன்றதொரு விபரீதமான சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட உந்தப்படுவார்கள் எனும் குற்றச்சாட்டை நம்மால் மறுக்கவே முடியாது. இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தனை வேகம் செல்வது சட்டத்திற்கு புறம்பானது எனும் புரிதலே பலரிடம் இருப்பதில்லை.
https://twitter.com/chennaipolice_/status/1543884883319132160
இந்நிலையில் வாசனின் இந்த விபரீத சாகசத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள் எனக்கேட்டு GREATER CHENNAI POLICE -GCP எனும் சென்னை போலீஸின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து கேட்டார். அதற்கு It is noted என்று காவல்துறை தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த பிரச்சனையை வாசன் சட்டரீதியாக சந்திக்க நேரலாம் எனவும் கைது செய்யப்படலாம் எனவும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. எந்த தலைமுறை kids-களாக இருந்தாலும் இதுபோன்ற vlogger-களுக்கும்,influencer-களுக்கும் சட்டரீதியான வழிமுறைகள், நெறிமுறைகள் தாண்டி தார்மீக பொறுப்புணர்வும் வேண்டும் என்பதே பலரின் கோரிக்கைகளாக இருக்கிறது.
- வேல் பிரசாந்த்








