காவலர் வீரவணக்க நாள் இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் பணியிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காவலர் வீரவணக்க நாளான இன்று பல்வேறு தலைவர்களும் தங்களுடைய வீரவணக்க நாள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கடமையை உயிர்மூச்சாகக் கொண்டு, நாட்டின் அமைதியையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களின் அளப்பரிய பணியையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நினைவுகூரும் காவலர் வீரவணக்க நாள் இன்று.
குடும்பத்தைப் பிரிந்து, உயிரைப் பணயம் வைத்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு, நாட்டிற்காகத் தங்களின் இன்னுயிரை நீத்த காவலர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் இந்நாளில், இக்கட்டான சூழல்களிலும் இரவு பகலாக உழைத்து, மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் காவல்துறையினரின் அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




