அமெரிக்கா-கனடா இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து டிரம்ப் கனடாவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இரு நாடுகளும் நீண்டகால கூட்டாளிகளாக இருந்தபோதிலும், கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக ஆக வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான தனது மோசமடைந்து வரும் உறவில் மேலும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், கனடா அமெரிக்கா எல்லைப்பகுதியில் உள்ள மிகப்பெரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஏரியான ‘அன்டாரியோ ஏரியை(Lake Ontario)’ ‘அமெரிக்கா ஏரி(Lake America)’ என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஓவல் அலுவலகத்தில் உள்ள ரெசொலூட் மேசையில், அமெரிக்க புவியியல் பெயரிடல் சேவைக்காக ஏரியின் பெயரை மாற்றும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வர்த்தகம் தொடர்பாக கனடாவை விமர்சித்ததோடு, “அவர்கள் தங்களுக்கு எல்லாம் உரிமையுள்ளது என்று நினைக்கிறார்கள், அதை நாம் அனுமதிக்க முடியாது,” என்றும் கூறினார். மேலும், வர்த்தக விஷயத்தில் கையாள்வதற்கு அந்நாடு “மிகவும் மோசமானது” என்றும் அவர் தெரிவித்தார்.
அன்டாரியோ ஏரியை அமெரிக்க ஏரி என பெயர் மாற்றம் செய்தது அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட பயன்படுமே தவிற, கனடா இந்தப் புதிய பெயரை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரம் டிரம்புக்கு இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பெயர் மாற்றத்திற்கு கனட பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, அன்டாரியோ ஏரி என்ற பெயர், ‘அன்டாரி’ஒ’ என்ற வெண்டாட் வார்த்தையிலிருந்து வந்தது. அதற்குப் பொருத்தமாகவே, “ஏரி அழகானது, ஏரி பெரியது” என்று பொருள். இந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது; இது கனடாவின் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரப் பிரகடனம் ஆகிய இரண்டிற்கும் முந்தையது. அமெரிக்கா மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். அவர்களின் வர்த்தக உறவுகள், வெளியுறவுக் கொள்கைகள், தேசிய நினைவுச்சின்னங்கள், நீர்நிலைகளின் பெயர்கள் என அனைத்தும் மாறுகின்றன. யதார்த்தத்திற்குப் பெயரிடுவது என்பது, அப்போதும், இப்போதும், எப்போதும் அதை அன்டாரியோ ஏரி என்றே அழைப்பதுதான் என்பதையும் கனடியர்கள் அறிவார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.




