தமிழ்நாடு – கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்களாக உணவின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன. இந்த மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களில் வனவிலங்குகள் அடிபட்டு இறந்து வருவதால், இரவு நேர போக்குவரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், திம்பம் மலைப்பாதையில் 12 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பாரம் ஏற்றி வந்த 10 சக்கரங்களை கொண்ட கனரக லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் இருப்பதாக கூறி, அவற்றை காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால், கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாடு வந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகள், நடுக்காட்டில் ஆங்காங்கே 3 நாட்களாக வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக லாரி ஓட்டுநர்கள் உணவின்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








