ஹாலோவீன் திருவிழாவில் நடந்த சோகம்; கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு

தென் கொரியவில் பாரம்பரிய ஹாலோவீன் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பேய்களைப் போன்றும் வித்தியாசமான உருவங்களைப் போன்றும் வேடமணிந்து கொண்டாடப்படும் ஹாலோவீன் திருவிழா, உலகின் பல்வேறு நாடுகளில்…

தென் கொரியவில் பாரம்பரிய ஹாலோவீன் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பேய்களைப் போன்றும் வித்தியாசமான உருவங்களைப் போன்றும் வேடமணிந்து கொண்டாடப்படும் ஹாலோவீன் திருவிழா, உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமானதாகும். இந்த பாரம்பரிய திருவிழா தென்கொரிய நாட்டில் ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு தென்கொரியாவின் இடேவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹாலோவீன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்திருந்தனர். கொரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இத்திருவிழா, மிக விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது.

இவ்விழாவின்போது ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், நெரிசல்களில் சிக்கியவர்களை மீட்டு CPR முறையில் முதலுதவி அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இதில், ஈரான், உஸ்பெகிஸ்தான், சீனா, நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 19 வெளிநாட்டினர் உள்பட 151 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சுமார் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார். பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையிலான அனைத்து அமைச்சர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.