நெல்லை மாவட்டம், பாபநாசம் பாண தீர்த்தத்தை சுற்றுலாப் பயணிகள், வரும் 18ம் தேதிமுதல் பார்வையிட வனத்துறை அனுமதியளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் காரையார் அணைக்கு மேலே உள்ள பிரசித்திபெற்ற பாணதீர்த்தம் அருவிக்கு காரையார் அணை வழியாக படகு சவாரி மூலமாக சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் பல்வேறு காரணங்களாலும், வனத்துறையின் நெருக்கடியாலும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து படகுகளும் அணையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் வருகிற 18 -ந் தேதி முதல் பாணதீர்த்த அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறுகையில், சுற்றுலா பயணிகள் பாணதீர்த்த
அருவிக்கு செல்ல நபர் ஒருவருக்கு 500 ரூபாய் செலுத்தி முண்டந்துறை வனச்சரக
அலுவலகத்திலிருந்து இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனம் மூலமாக
வாகனத்திற்கு 10 பேர் வீதம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்குள் முண்டந்துறை வன அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பாணதீர்த்த அருவியை பார்க்கும் வியூ பாயிண்ட் வரை சென்று சுற்றுலா பயணிகளுக்கு காண்பித்து மீண்டும் முண்டந்துறை வன அலுவலகத்தில் கொண்டு வந்துவிட்டுவிடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.







