சென்னையில் தூய்மை பணியாளர்கள் பயணிப்பதற்காக நாளை 100 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் தூய்மை பணியாளர்கள் பயணிக்கும் விதமாக நாளை 100 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வேண்டுகோளை ஏற்று தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட வழித்தடத்தில் நாளை 100 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பேருந்துகளில் தூய்மை பணியாளர்கள் தங்கள் அடையாள அட்டையுடன் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்களை தவிர பிற நபர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







