முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவர்களிடம் பாலியல் தொல்லை குறித்த புகார்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்

பள்ளி மாணவர்களிடமிருந்து பாலியல் தொல்லை குறித்த புகார்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

 

சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், மாணவர்களிடம் இருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் பாலியல் தொல்லை குறித்த புகார்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளிக்கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரிடமும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு ஒன்று தயாரித்து வழங்கப்படும் என்றும் மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 முதல் 22ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நூலக இயக்ககத்தின் மூலம் 32 மாவட்ட மைய நூலகங்கள், கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பிற அரசு உதவி பெறும் நூலகங்களிலுள்ள புத்தகங்களின் விவரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நூற்பட்டியலை உருவாக்கும் பணி நடைப்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் வாசகர்கள் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதுப்பொலிவுடன் புனரமைக்க, கட்டிட அமைப்பில் ஏற்பட்ட பழுதுகள் சரி செய்யப்படும் என்றும், குளிர்சாதன வசதி மற்றும் இதர மின்சார வசதிகள் புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும் என்றும் மின் நூலகம் உருவாக்கப்பட்டு உலகமெங்கும் உள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் கல்வி ஆண்டில் 26 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும். 10 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் 36 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 46 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 367 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், 723 நிலை 1 முதுகலை கணினி பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பல்வேறு பாடங்களில் 492 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு வாயிலாக நிரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ம் கல்வியாண்டில் 2098 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டியதாக இளைஞர் கைது

Jeba Arul Robinson

வென்றெடுத்தோம் இடப் பங்கீட்டை…கொண்டாடுவோம் இனிப்பு வழங்கி…!

Jeba Arul Robinson

தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!

எல்.ரேணுகாதேவி