சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் இன்று (02-04-2023) வெளியிட்டுள்ள அருகில் கூறியிருப்பதாவது:- ‘மத்திய அரசு, சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வானது வாகன ஓட்டிகளுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் பொருளாதாரத்தில் சுமையை ஏற்படுத்தியுள்ளதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள 566 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று (01.04.2023) முதல் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு வசூலிக்கப்படுகிறது.
இதனால் சரக்கு போக்குவரத்தில் கூடுதல் செலவீனம் ஏற்படும். வாடகைக்கு செல்லும் வாகன கட்டணம் உயரும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.
ஏற்கனவே லாரி தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தொழிலை நடத்துவதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்ற வேளையில் இப்போது சுங்கக்கட்டண உயர்வானது அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் நடைமுறையில் உள்ள சுங்கக்கட்டண முறையை மாற்றி ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் வகையில் கொண்டு வர கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் சுங்கக்கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக சுங்கச்சாவடிகளை கடந்து செல்கின்ற சாதாரண வாகன ஓட்டிகளும் உரிமையாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள். ,
எனவே மத்திய அரசு, சுங்கக்கட்டண உயர்வானது பொருளாதார நிலை, விலைவாசி. சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை முக்கிய கவனத்தில் கொண்டு உயர்த்தப்பட்டுள்ள சுங்கக்கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.







