டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி தொடர் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் டி.என்.பி.எல் சேர்மன் ஆனந்த் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் “தமிழ்நாடு பிரிமியர் லீக் 7-வது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளதாகவும், இதில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சேலம் மாவட்டத்திலும், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி திருநெல்வேலியிலும் நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எல்.இ.டி விளக்குகளை சீர்ப்படுத்தும் பணிகள் நடைபெற இருப்பதால், இந்தாண்டு டி.என்.பி.எல் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படவில்லை.
டி.என்.பி.எல் போட்டியில் முதல் பரிசு ரூ.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம்,
மூன்று மற்றும் நான்காம் பரிசு ரூ.20 லட்சம் என மொத்த பரிசுத்தொகை ரூ.1.7 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தாண்டு நடைபெறும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில், சர்வதேச போட்டிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த டி.ஆர்.எஸ் (DRS) தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடக்கம் ஜூன் 12 முதல் ஜூன் 16 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி எண்: 1 முதல் 6 வரை கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கும், போட்டி எண்: 7 முதல் 13 வரை என்.பி.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானம், நத்தம், திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டிகளுக்கான ஆன் லைன் டிக்கெட் விற்பனை ஜூன் 3, சனிக்கிழமை அன்று Paytm Insider ஆன்லைன் தளத்தில் மதியம் 2 மணி முதல்விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்தாக, சேலம் மற்றும் திருநெல்வேலியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி தேதிகள்
-ஜூன் 12 முதல் ஜூன் 16 வரை – கோவை
-ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை – திண்டுக்கல்
டபுள் ஹெட்டர் போட்டிகளுக்காக வழங்கப்படும் ஆன்லைன் டிக்கெட்களை இரண்டு போட்டிகளைக் காண பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஆன்லைன் டிக்கெட் விற்பனையைப் பொறுத்தே கவுண்டர்களிலும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







