தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 இடங்களுக்கு அடுத்த மாதம் 9ந்தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 2 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 40 கிராம ஊராட்சி தலைவர், 436 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், 2 நகராட்சி வார்டு உறுப்பினர், 8 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் வேட்பாளர்களை களமிறக்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேர்தலுக்கான அறிவிக்கை வரும் 20ந்தேதி வெளியிடப்படும் என்றும் அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் 27ந்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ள மாநில தேர்தல் ஆணையம், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 28ந்தேதி நடைபெறும் என கூறியுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூன் 30ந்தேதி கடைசி நாள். அடுத்த மாதம் 9ந்தேதி ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 12ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் மொத்தம் 1041 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு சிசிடிவி காமிராக்கள், வெப் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவை கண்காணிப்பாளர்கள் என மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.