தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய மாற்று வழியை மாநில அரசு ஆராய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2019ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளே நடப்புக் கல்வியாண்டில் திறக்கப்படவுள்ளன. ஆனால், 2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 4 கல்லூரிகள் 7 ஆண்டுகளாகியும் இன்னும் அமைக்கப்படவில்லை என ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலம் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடியாது என்பதால், 4 மருத்துவ கல்லூரிகளை பிற மாவட்டங்களில் மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசின் நிபந்தனைப்படி இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மாநில அரசு அனுமதி கோரலாம் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ராமதாஸ், விருதுநகரில் நடைபெறவுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில், பிரதமர் மோடி இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.







