திருப்பூர் | கழிவு பஞ்சாலையில் பயங்கர தீ விபத்து – அணைக்கும் பணி தீவிரம்!

திருப்பூரில் உள்ள கழிவு பஞ்சாலையில் பயங்கர தீ விபத்துக்குள்ளானதையடுத்து அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியில் ரமேஷ் என்பவர் கழிவு பஞ்சாலை வைத்து நடத்தி வருகிறார். 30க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இன்று(ஜூன்.05) பிற்பகல் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த போது திடீரென பஞ்சு அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பற்றி எரியத் துவங்கியுள்ளது.

இதனை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறிய நிலையில், ஆலை முழுவதும் தீ பரவியது இதனால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் இயந்திரங்கள் கட்டிடம் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் இருந்து சேதம் அடைந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் மற்றும் அவிநாசி தீயணைப்பு வாகனங்கள் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மங்கலம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.