திருப்பூர் பேருந்து விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

திருப்பூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

திருப்பூரில் இன்று காலை தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் இருவர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் தொகையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை, செங்காளிபாளையம் கிராமம், சாம்ராஜ்பாளையம் பிரிவில் இன்று (6.2.2025) காலை சுமார் 8.45 மணியளவில் திருப்பூரிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த TN34 T 4050 என்ற பதிவெண் கொண்ட தனியார் பேருந்து ஒன்று அதே திசையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியைக் கடந்துசெல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம், வாத்துக்குளி வட்டம், விருமாண்டம்பாளையம் தில்லை நகரைச் சேர்ந்த  பெரியசாமி (வயது 19) த/பெ.சந்திரன் மற்றும் குன்னத்தூர் கிராமம், சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 19) த/பெ.செந்தில்குமார் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும். இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.