தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கோவையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலா ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்தியாவில் பணக்கார கோவிலான திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சம் பேர் வந்து கொண்டுள்ளனர். பல மணி நேரம், பல நாள்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். திருப்பதி சுவாமியை சில நிமிட நேரம்தான் தரிசிக்க முடியும் என்றாலும் அது பூர்வபுண்ணிய பலன் என்பது மக்களின் நம்பிக்கை. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இதற்கு முக்கிய காரணமாகும். அதனால்தான் ஆண்டுக்கு ஒருமுறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கோவையில் இருந்து தினசரி சுற்றுலா ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் இருவேளை சைவ உணவு, குளிர்சாதன சொகுசுப் பேருந்து வசதி மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்டவை வழங்கப்படும். பெரியவர்களுக்கு 4,000 ரூபாய், சிறியவர்களுக்கு 3,700 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா குறித்த தகவல்களுக்கு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் இணையதளமான http://www.ttdconline.com-என்ற இணையதளத்தில் சுற்றுலா பற்றி விவரங்கள் மற்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








