அடுத்தடுத்த கொலைகளால் அதிரும் திஹார்… 92 முறை குத்தி கொல்லப்பட்ட கேங்ஸ்டர்… விசாரணையில் இறங்கும் தமிழக காவல்துறை… கொலையின் பின்னணி என்ன…? பரபரப்பு சிசிடிவி காட்சிகளுடன் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
ஒருவரை 4 பேர் சேர்ந்து கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக குத்தி கொல்லும் இந்த சம்பவம் நடந்தது தெற்கு ஆசியாவிலேயே பெரிய சிறையாகவும், நாட்டிலேயே பாதுகாப்பு மிக்க சிறையாகவும் கருதப்படும் திஹார் சிறைக்குள்தான். இந்த சிறைக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்கள் வெடிப்பது வழக்கம். அப்படி நடந்த மோதல் ஒன்றில் பழிதீர்க்க நடந்த கொலைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தான் இவை.
டெல்லியைச் சேர்ந்த கேங்ஸ்டர்கள் தில்லு தாஜ்புரியா கூட்டாளிகளுக்கும், ஜிதேந்தர் கூட்டாளிகளுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வருவதாக கூறப்படுகிறது. கூட்டத்தின் இரு தலைவர்களான தில்லு தாஜ்புரியா மற்றும் ஜிதேந்தர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் சிறையில் இருந்தவாறே தங்கள் கூட்டாளிகள் மூலம் பல குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இரு கும்பல்களுக்கு இடையே பல முறை கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்காக டெல்லி ரோகிணி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கேங்ஸ்டர் ஜிதேந்தரை, வழக்கறிஞர் உடையில் வந்த தில்லுவின் கூட்டாளிகள் சுட்டு படுகொலை செய்தனர். கொலையாளிகள் இருவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொலைச் சம்பவத்தின் பின்னணியில் தில்லு தாஜ்புரியா இருந்தது விசாரணையில் தெரியவந்தது. திஹார் சிறையின் தரைத்தளத்தில் தில்லு அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜிதேந்தரின் கூட்டாளிகள் யோகேஷ், தீபக், ரியாஸ் கான் மற்றும் ராஜேஷ் ஆகியோர் அதே சிறையின் முதல் தளத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். தங்கள் தலைவனான ஜிதேந்தர் கொலைக்கு பழிதீர்க்க காத்திருந்த நான்கு பேரும், மே 2 ஆம் தேதி தங்கள் அறைக்கதவின் கம்பிகளை உடைத்து வெளியே வந்தனர். பின்னர் தில்லு தாஜ்புரியாவின் அறைக்குள் புகுந்தவர்கள், அவரை தாக்கத் தொடங்கினர். தப்பிக்க வெளியே ஓடிவந்த தில்லு ராஜ்புரியாவை சுற்றி வளைத்த நான்கு பேரும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக குத்தி கொலை செய்தனர். தடுக்க வந்த தில்லுவின் ஆதரவாளர்களையும் வெட்டி காயப்படுத்தினர்.
கொல்லப்பட்ட தில்லுவின் உடலை போலீசார் வெளியே கொண்டு செல்ல முற்பட்டபோதும், ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் உயிரற்ற உடலை மீண்டும் தாக்கினர். உணவருந்த கொடுத்திருந்த பிளேட்டை உடைத்து கூர்மையாக்கி கொலை செய்ய அவர்கள் பயன்படுத்தியிருந்தனர். கொலைவெறித் தாக்குதலைக் கண்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுக்காமல், வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததை, வெளியான சிசிடிவி காட்சிகள் அம்பலப்படுத்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட தவறிய சிறைத்துறையைச் சேர்ந்த 3 உதவி எஸ்.பி-க்கள் உட்பட 8 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கேங்ஸ்டர்களுக்கு தொடர்புடைய டெல்லியிலுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்பது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. திஹார் மத்திய சிறையின் வெளிப்பகுதி மற்றும் உயர் பாதுகாப்பு பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 8 வது பட்டாலியன் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால் கொலைச் சம்பவம் நடந்தபோது அங்கு பணியில் இருந்த காவலர்கள், அவர்களை அப்புறப்படுத்தி கொலைச் சம்பவத்தை தடுக்காதது சர்ச்சையானது. அதற்கான காரணம் குறித்து விளக்கமளிக்கவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மே 5 ஆம் தேதி லெஃப்டினண்ட் கவர்ணர் சக்சேனாவை டில்லி சிறைத்துறை டிஜிபி சந்தித்து கொலைச் சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராமுக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதனடிப்படையில் கூடுதல் டிஜிபி ஜெயராம் டில்லி சென்று, கொலைச் சம்பத்தை நேரில் கண்ட தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஏப்ரல் 14 ஆம் தேதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேங்ஸ்டர் அத்தூர் ரஹ்மான் மற்றும் கூட்டாளிகளால் மற்றொரு கேங்ஸ்டரான பிரின்ஸ் தெவாடியா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தில்லு தாஜ்புரியா கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட திஹார் சிறையின் பாதுகாப்பு முறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.













