திருப்பரங்குன்றம் தீபத்தூன் விவகாரம் : அரசின் முடிவு என்ன? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி?

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு என்ன?என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அவற்றை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை இன்று விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, “நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதாடுகையில், தற்போதைய அரசு நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றும் என நம்புகிறோம் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பில், “இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ” தற்போதைய அரசு இந்த உத்தரவை நிறைவேற்றும் என நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டது.

தர்கா தரப்பில் தங்களையும் வழக்கில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “உத்தரவு தொடர்பான அரசின் முடிவு என்ன? என்பது தொடர்பாக தெரிவிக்க அறிவுறுத்தியும், தர்கா தரப்பை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டு வழக்கை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.