குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்ற விவாதம் அரசியல் அரங்கில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சார்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை . இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறித்தவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும் என்ற குறிப்பிட்டுள்ள திருமாவளவன்,
“கடந்த எட்டாண்டு கால பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றிக் கிறித்தவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். தனித்தியங்கும் சிறிய சிறிய வழிபாட்டுத் தலங்கள், ஜெபக்கூடங்கள் காவல்துறையினரின் ஒத்துழைப்போடு தகர்க்கப்படுகின்றன.இந்தியாவின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கிறித்தவ சமூகம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மகத்தானது” என்று கூறியுள்ளார்.
மேலும், “எதிர்க்கட்சிகள் தமது பொது வேட்பாளராகக் கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும். இது பாதுகாப்பற்ற நிலையில் எந்நேரமும் அச்சத்தில் உழலும் கிறித்தவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும் அமையும்” என்று வலியுறுத்தியுள்ளார்.







