7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் முடிவு, அரசியலமைப்புக்கு எதிரானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை.
தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, வரும் செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ஏழு பேர் விடுதலை குறித்து ஆவணங்களை ஆய்வு செய்த ஆளுநர், குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளது என முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அரசியலமைப்பு சட்டம் 161வது விதியின்படி, எழுவர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம், ஆளுநருக்கு உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில், ஆளுநரின் தற்போதைய முடிவு அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார்.
எழுவர் விடுதலை விவகாரத்தில் தனது அதிகாரத்தை மட்டுமில்லாமல், மாநில அரசின் அதிகாரத்தையும் தமிழக ஆளுநர் தட்டிக் கழித்துள்ளதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.







