ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திருமாவளவன் கைது

ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து திரும்ப பெற வலியுறுத்தி  ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக…

ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து திரும்ப பெற வலியுறுத்தி  ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையுடன் ஜனவரி மாதம் 09ம் தேதி தொடங்கியது.  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட வரிகளை புறக்கணித்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் திடீரென வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக ஆளுநரை கண்டித்து ஆளுநரை மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை திருமாவளவன் எம்பி உள்ளிட்ட விசிக வினர் முற்றுகையிட முயன்றனர்.

தடையை மீறி ஆளுநர் மாளிகையை  முற்றுகையிட முயன்ற திருமாவளவன் எம்பி,  ரவிக்குமார் எம்.பி உள்ளிட்ட விசிகவினரை காவல்துறை கைது செய்துள்ளது.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது..

“தீவிர சனாதன சக்திகளை தேடி பிடித்து பாஜக ஆளாத மாநிலத்தில் ஆளுநர்களாக போட்டு, குழப்பத்தை ஏற்படுத்தி நிர்வாகத்தில்  தேக்கத்தை உண்டு பண்ணுகிறார்கள். ஆளுநர் ஆர் என் ரவி இல்லாமல் அடுத்த சட்ட பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும்

ஆளுநர் பேசி தான் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
திமுக அதிமுக தொடங்குவதற்கு முன்பு , திராவிடர் கழகத்தை பெரியார் ஏற்படுத்துவதற்கு முன்பு திராவிடம் என்ற சொல்லை தமிழ்நாட்டில் பயன்படுத்தியவர்கள் அயோதிதாச பண்டிதர் ,ரெட்டை மலை சீனிவாசன் உள்ளிட்டோர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என திருமாவளவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.