மலேசியாவில் இருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் தாலியை கழுற்ற சுங்க அதிகாரிகள் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலாவிற்காக சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு வந்த போது சுங்க விதிகளின்படி இல்லாமல் கூடுதலாக அவர்கள் நகை அணிந்து வந்ததாக கூறியுள்ளனர். மேலும் அவற்றை கழுற்றி தரும்படி சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதற்கு அந்த பெண் தான் தாலி அணிந்துள்ளதாகவும், அவற்றை கழுற்றி தர முடியாது எனவும் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அவரது கணவரின் நகைகளை வாங்கி கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் மலேசியாவிற்கு திரும்பி செல்லும் போது நகைகளை வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் அந்த பெண் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
வீடியோவில் அந்த பெண் கூறியதாவது, “திருப்பதி, திருத்தணி உள்பட கோயில்களுக்கு செல்ல மலேசியாவில் இருந்து வந்தோம். ஆனால் சென்னை விமான நிலையத்தில் இரண்டரை மணி நேரம் சுங்க இலாகா அதிகாரிகள் எங்களை அலைக்கழித்தனர். கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழுற்ற சொன்னார்கள். நான் வாக்குவாதம் செய்ததால் என் கணவரின் நகைகளை வாங்கி கொண்டனர். எவ்வளவு நகைகள் கொண்டு வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது” என கூறினார்.
சுங்க விதிகளின் அளவுக்கு அதிகமான நகைகளை அணிந்து வந்தால் உரிய அனுமதி அறிக்கையை தர வேண்டும். ஆனால் எதுவும் தராமல் கொண்டு வந்ததால் நகைகளை வாங்கி வைத்து கொண்டதாகவும் திரும்பி செல்லும் போது பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டதாகவும் சுங்க இலாகா அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நியூஸ்7 தமிழில் வெளியான காணொலியை காண:







