மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் கால தாமதம் கூடாது என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ், எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்புக்கான வரைவு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள சமூகநீதிக்கு எதிரான எந்த அம்சத்தையும் ஏற்க இயலாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது சரியானது எனக் கூறியுள்ள அவர், மத்திய அரசின் நிலைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் எத்தகைய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படவுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் செய்யப்படும் காலதாமதம் தேவையற்ற குழப்பங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பைக்கூட படித்து விடக் கூடாது என்பதுதான் தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் நோக்கமாக இருக்கக்கூடும் என்பதால் அதனை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது என தெரிவித்த அவர்,
தமிழ்நாடு அரசு தனது கல்விக் கொள்கையை வெளியிடுவதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும் எனவும், மாநிலக் கல்விக் கொள்கை குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








