மகனை தத்தெடுக்க உச்சநீதிமன்றத்தை நாடிய பெண்! நடந்தது என்ன?

விவாகரத்து பெற்றபிறகு, மறுதிருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், முதல் திருமணத்தில் பிறந்த மகனை தத்தெடுக்க உச்சநீதிமன்றத்தை நாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  வழக்கறிஞரான திவ்ய ஜோதி சிங்கிற்கு கடந்த 2013ம் திருமணம் நடைபெற்றது. திவ்யாவின்…

விவாகரத்து பெற்றபிறகு, மறுதிருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், முதல் திருமணத்தில் பிறந்த மகனை தத்தெடுக்க உச்சநீதிமன்றத்தை நாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வழக்கறிஞரான திவ்ய ஜோதி சிங்கிற்கு கடந்த 2013ம் திருமணம் நடைபெற்றது. திவ்யாவின் கணவரும் வழக்கறிஞர். 2015ல் திவ்யா கர்ப்பிணியாக இருந்தபோது திவ்யாவின் கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் திவ்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

பிறகு திவ்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அவரின் கணவர் ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் 2016ம் ஆண்டு திவ்யா அவரது கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். பிறகு திவ்யாவின் கணவருக்கு மறுதிருமணம் நடந்து குழந்தையும் பிறந்திருக்கிறது.

இதனையடுத்து, 2020ம் ஆண்டு திவ்யா மறுதிருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து முன்னாள் கணவர் திவ்யாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், திவ்யா தனது தற்போதைய கணவருடன் சேர்ந்து தனது மகனை தத்தெடுக்க முடிவு செய்து உச்ச நீதிமன்றத்தை நாடினார்.  பொதுவாக இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் (ஹமா)படி, ஒரு குழந்தையின் தந்தை அனுமதிபெற்றே தத்தெடுக்க முடியும்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது குழந்தை பிறந்தது முதல் பார்க்க கூட வராத தந்தையின் அனுமதி இல்லாமல் தனது மகனை தத்தெடுக்க அனுமதி வழங்க வேண்டும் என திவ்யா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தந்தையின் அனுமதி இல்லாமல் குழந்தையை எவ்வாறு தத்தெடுக்க முடியும்? என கேள்வி எழுப்பியது. மேலும் டெல்லி காவல்துறை இது குறித்து திவ்யாவின் முன்னாள் கணவருக்கு நோட்டீஸ் அனுப்பவும், இரண்டு வாரத்திற்குள் அவர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.