கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 15000 கன அடியாக உயர்ந்துள்ளது.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி வரை கர்நாடகம் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 51-டி.எம்.சி நீரில் 15.டி.எம்.சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சிய 38- டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடகத்துக்கு உத்தரவிட மறுத்துவிட்டதால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதனிடையே கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த இரு அணைகளில் இருந்து முதலில் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. பின்னர் உபரி நீர் திறப்பு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 4 தினங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வண்ணம் உள்ளது. இன்று நிலவரப்படி 15000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து பரிசல் விதிக்கப்பட்ட தடை 4ஆவது நாளாக நீடிக்கிறது.







