அதிமுக மாநாடு : சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் மதுரை சென்ற தொண்டர்கள்!

அதிமுக  மாநாட்டில் பங்கேற்பதற்காக  சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்ட அதிமுக தொண்டர்கள் மதுரை சென்றனர். மதுரையில் நாளை அதிமுக சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அதிமுக…

அதிமுக  மாநாட்டில் பங்கேற்பதற்காக  சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்ட அதிமுக தொண்டர்கள் மதுரை சென்றனர்.

மதுரையில் நாளை அதிமுக சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இந்த எழுச்சி மாநாட்டிற்கு கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் என தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக சார்பாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. நாளை  நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் அந்த சிறப்பு ரயில் மூலம் 1,100 அதிமுக தொண்டர்கள் மதுரை புறப்பட்டு சென்றனர்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா மற்றும் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் மாநாட்டிற்கான சிறப்பு ரயிலை வழி அனுப்பி வைத்தனர்.

1,100 அதிமுக தொண்டர்கள் பயணித்த இந்த சிறப்பு ரயில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. மேலும் இந்த ரயிலில் 13 பெட்டிகளில் அதிமுக தொண்டர்கள் பயணித்தனர். இந்த சிறப்பு ரயில் இன்று காலை 9.10 மணிக்கு மதுரை சென்றடைந்தது.

அதிமுக மாநாட்டிற்கு சிறப்பு ரயில் மட்டுமின்றி வழக்கமான ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையிலிருந்து மதுரை புறப்பட்டு சென்றனர். இந்த சிறப்பு ரயிலின் ஜன்னல் முழுவதும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு அழைக்கிறோம் என்று வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது ஒவ்வொரு பெட்டிக்கும் ஒவ்வொரு செக்யூரிட்டி அமர்த்தப்பட்டு தொண்டர்களை பாதுகாப்பான முறையில் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.