19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களை பாடியவர் மறைந்த வாணி ஜெயராம். யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது என்ற வரிகளை உச்சரித்தபோதும், எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் என பாடியதும் நெஞ்சத்தை கிள்ளிடும் வகையில் இருக்கும்.
கலைவாணியாக பிறந்து வாணி ஜெயராமாக மாறிய அவர் பாடிய பிரபல தமிழ்ப்பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.
தாயும் சேயும் என்ற தமிழ்த்திரைப்படத்தில் முதன்முதலில் பாடியிருந்தாலும் வாணி ஜெயராம் பிரபலமானது மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலில்தான். 1974ல் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், வாலி பாடலை எழுதியிருந்தார்.
கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல். எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடலை எழுதியிருந்தார். இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகத்தில் இடம்பெற்றிருந்தன. திரைப்படத்தின் கதையை கூறுவதைப் போல இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார் வாணி ஜெயராம்.
மானச சஞ்சரரே: சங்கராபரணம் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். அற்புதமாக பாடப்பட்ட இந்தப் பாடலுக்கும் சிறந்த பாடகிக்கான தேசிய விருது வாணி ஜெயராமுக்கு கிடைத்தது.
கே. ரங்கராஜ் இயக்கிய நெஞ்சமெல்லாம் நீயே திரைப்படத்தில் இடம்பெற்ற யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது பாடலுக்கு. சங்கர் – கணேஷ் இசையமைக்க, வைரமுத்து எழுதியிருந்தார். வாணி ஜெயராமின் குரலில் பாடலை கேட்கும்போது நமது நெஞ்சம் ஏதோ ஒருவகையில் பிழியப்படுவது உண்மைதான்.
வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் பிரபலமான மற்றுமொரு பாடல். 1979ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் இடம்பெற்ற நானே நானா யாரோ தானா பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடலை எழுதியது வாலி. இதே படத்தில் இடம்பெற்றிருந்த “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாடலும் கேட்போரை உருக வைக்கக்கூடியது.
கே.பாலச்சந்தர் இயக்கிய நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதி கண்ணம்மா பாடலும்,. ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984ல் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ பாடல்களாகும். 80களின் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்து, வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல்கள் இவை.
1978ம் ஆண்டில் வெளியான அந்தமான் காதலி திரைப்படத்தில் இடம்பெற்ற நினைவாலே சிலை செய்து பாடலை கே.ஜே. யேசுதாசும் வாணி ஜெயராமும் இணைந்து பாடியிருப்பார்கள். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதியிருந்தார். “திருக்கோவிலே ஓடிவா” என்ற வரியை கே.ஜே. யேசுதாஸ் தெருக்கோவிலே ஓடிவா என உச்சரித்ததாக சிலர் உணர்வதுண்டு. ஆனால், வாணி ஜெயராமின் குரல் துல்லியமாக ஒலிக்கும்.
1978ல் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே நாள் உனை நான் பாடல் அந்த காலகட்ட காதலர்களின் தேசிய கீதமாக இருந்தது. “நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் என்ற வரிகளுக்கு மயங்காதவர் யாரும் உண்டோ?
1979ல் வெளிவந்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் இடம்பெற்ற என்னுள்ளில் ஏதோ ஏங்கும் ஏக்கம் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சிறப்பான மற்றொரு வாழ்க்கைக்கு தகுதியானவள் என நினைத்து நாயகியின் ஏகாந்த மன உணர்வை, “என் மன கங்கையில் சங்கமிக்க என்ற வரிகளில் வாணி ஜெயராமின் குரல் ஏக்கத்தின் உச்சத்தைத் தொடும்.
1981ம் ஆண்டில் வெளிவந்த பாலைவனச் சோலை படத்தில் இடம்பெற்ற மேகமே மேகமே பாடலுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர் . “தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களில் ஏதும் எழுதாது என்றும் எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்” என்ற கங்கை அமரனின் வரிகள் வாணி ஜெயராமின் வாழ்க்கையை போல அமைந்து விட்டது.













