மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஆசியக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி வெளியேறியது.
இலங்கையின் கொழும்புவில், 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியும், இந்திய அணியும் விளையாடிவருகிறது. ஆசிய கோப்பை 2023 மூலம் இந்திய அணி 10 முறையாகவும், இலங்கை அணி 12வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன. ஆசிய கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 7 முறை இறுதிப்போட்டிகளில் மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக இந்திய அணி 4 முறையும், இலங்கை அணி 3 முறையும் கோப்பைகளை வென்றுள்ளது.
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இறுதி போட்டியில், கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் இலங்கை வீரர்களும், 8-வது முறையாக சாம்பியனாகும் முனைப்பில் இந்திய வீரர்களும் விளையாடிவருகின்றனர். இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை, அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. போட்டியில் டாஸ் மட்டும் போடப்பட்டுள்ள நிலையில், மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் போட்டி தொடங்குவதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் போட்டி 3.40 மணிக்கு துவங்கப்பட்டது.
பின்னர் தொடங்கிய போட்டியில் இலங்கை அணி தனது முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான குசல் பெரேரா விக்கெட்டை பும்ரா பந்து வீச்சில் இழந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ் அதனை மெய்டனாக வீசினார். தொடர்ந்து 4வது ஓவர் வீசிய சிராஜ் ஓவரில் முதல் பந்தில் நிசாங்கா ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து 3, 4வது பந்துகளில் சமரவிக்ரமா, அசலங்கா ஆட்டமிழந்தனர். அடுத்து கடைசிப் பந்திலும் தன்ஞ்செயாவும் டக்கவுட் ஆனார். இந்த நான்காவது ஓவரில் மட்டும் விக்கெட், ரன் இல்லை, விக்கெட், விக்கெட், பவுண்டரி, விக்கெட் என கணக்கை முடித்துவைத்தார். அடுத்து 6வது ஓவர் வீசிய சிராஜ் ஓவரில் இலங்கை கேப்டன் ஷானகா போல்ட்டானார். 4 வீரர்கள் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 10 ஓவர் முடிவில் இலங்கை அணி 31/6 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் போட்டியின் 12வது ஓவரை வீசிய முகமது சிராஜ் அந்த ஓவரின் 2வது பந்தில் குஷால் மெண்டிஸை போல்டாக்கி வெளியேற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 12 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் இலங்கை அணி மீளவே முடியாது என்ற நிலை ஏற்பட்டது. போட்டியின் 13வது ஒவரை வீசிய ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு துனித் வெல்லலகேவின் விக்கெட்டை கைப்பற்றினார்.
அதன் பின்னர் இலங்கை அணி 13வது ஓவரில் 50 ரன்களை எட்டியது. மீண்டும் பந்து வீச வந்த ஹர்திக் பாண்டியா வீசிய 15வது ஓவரில் இலங்கை அணி மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இலங்கை அணி 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது.







