AIIMS கட்டப்படாததற்குக் காரணம் திமுக தான் என காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த விஜயதரணி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
பாஜக கூட்டு முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள், அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக நான் பயணிப்பேன். எனது கன்னியாகுமரி மக்கள் மிகவும் என்னை நேசிக்கின்றனர். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடத்தில் தான் நான் இருக்கிறேன்.
விளவங்கோடு தொகுதி மக்களுக்கு எதிர்க்கட்சி வரிசையிலிருந்தே நான் நிறைய கொண்டு சேர்த்துள்ளேன், நிச்சயம் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பேன். என் தொகுதி, என் மாவட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப என் விருப்பம் அமையும், அதேபோல என் கட்சியின் விருப்பம் போலும் நான் பயணிப்பேன்.
மத்தியிலிருந்து வரும் திட்டங்களை பாஜக வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதிகளில் கூட மாநில அரசு செயல்படுத்தவில்லை என்பது உண்மை. மாநில அரசின் பங்களிப்பை கொடுக்காமல், ஒரே ஒரு செங்கலை காண்பித்து அரசியல் செய்து, AIIMS மருத்துவமனை கட்டுவதை தவற விட்டுவிட்டார்கள்.
மக்களுக்கான திட்டங்களையும், மக்களுக்கான நிதிகளையும் கொண்டு வருவதில் அரசியல் செய்தால் அது மக்களை தான் பாதிக்கும், அதை தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. தேசிய திட்டங்களில் அரசியல் செய்து மட்டுமே அளும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடைமுறைப்படுத்துவதைக் கைவிட்டு வருகிறது.
இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி கூறினார்.








