பல மாதங்களாக கண்டுகொள்ளப்படாத பொதுமக்களின் கோரிக்கை… துணை முதலமைச்சர் வருகையால் ஒரே நாளில் பொலிவு பெறும் தேனி சாலைகள்!

தேனியில் பல மாதங்களாக சாலை அமைக்க கோரிக்கை வைத்த பொதுமக்களை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், துணை முதலமைச்சர் வருகையையொட்டி ஒரே நாளில் குண்டும், குழியுமாக இருந்த இடங்களில் தார் சாலை போட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு மற்றும் திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு தேனி வருகை தரவுள்ளார். நாளை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆய்வு செய்ய உள்ளார்.

இதைத்தொடர்ந்து தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள எம்.பி அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை தேனி அருகே மதுராபுரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கட்சி நிர்வாகிகள் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பள்ளம் மேடாக இருந்த சாலைகளில், சிமெண்ட் பூசி பேட்ச் வொர்க் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள நுழைவாயில் சாலை பல மாதங்களாக பள்ளம் மேடாக காட்சியளிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை

ஆனால் அதன் அருகே தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகள், வாகனங்கள் பயணிக்கும் சாலை குண்டும் குழியுமாகவே இருக்கின்றது. உதயநிதி ஸ்டாலின்  செல்லும் வழிகள் முழுவதிலும் உள்ள சாலைகளில் பள்ளங்கள் சீர் செய்யப்பட்டு, தார் சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாவட்டத்திற்கு வருகை தந்தால்தான், தேனி மாவட்டத்தில்
உள்ள அரசு அதிகாரிகள், தங்களது பணிகளை துரிதமாக மேற்கொண்டு, மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.