கேரள மாநிலம் பாலக்காடு கோயில் ஊர்வலத்தின் போது யானை மிரண்டு திடீரென தேசிய நெடுஞ்சாலையில் ஓடியதால் பொது மக்கள் பீதியடைந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள புதுச்சேரி குரும்ப பகவதி கோயிலில் திருவிழாவிற்கு நேற்று யானைகள் வரவழைக்கப்பட்டன. ஏழு யானைகள் வரிசையாக நின்ற திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஊர்வலமாக வந்து கொண்டிருந்த போது நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென ஒரு யானை மிரண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஓட துவங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். முதலில் பாலக்காடு நோக்கி ஓடிய யானை பிறகு வாகனங்களின் வரிசையாக நிற்பதை கண்டு வாளையாறு நோக்கி ஓடியது. சாலையில் நின்ற யானை தும்பிக்கையை உயர்த்தி சாலையில் வருபவர்களை விரட்டியது. இதனை கண்ட பொது மக்கள் அலறி அடித்து ஓடினர். யானையின் ஓட்டத்தை பார்த்து பலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றனர்.
போலீசாரும், கோயில் அதிகாரிகளும் யானையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் யானை மீண்டும் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை பாகனும், யானையை பராமரிப்பவர்களும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் யானையை லாரியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11 மணியளவில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. யானை தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்குமாக மிரண்டு ஓடியதால் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.