பெள்ளி மற்றும் பொம்மனை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி ,முர்மு அங்குள்ள யானைகளுக்கு கரும்பு வழங்கினார்.
முதுமலை சரணாலயத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமை பார்வையிட்டு யானை பராமரிப்பாளர்களான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீலகிரி வந்திறங்கினார். இதனைத் தொடர்ந்து யானைகள் முகாமை ஒரு மணி நேரம் பார்வையிட்டார்.
இதன் பிறகு ஆஸ்கர் விருது பெற்ற தீ எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் கோவை மாவட்டம் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் உள்ள பாகன்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை முடித்துக் கொண்டு தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து 6 கிலோமீட்டர் வனப்பகுதி சாலை மார்க்கமாக மசினகுடி பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடைந்தார். ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்லும் அவர் மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.
நாளை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அன்றைய தினம், சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழ்நாட்டின் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கிறார். மேலும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதுடன், ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பாரதியார் மண்டபம் என பெயர் சூட்டும் விழாவிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.
இதன் பின்னர் ஆகஸ்ட் 7ம் தேதியன்று புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்) லீனியர் ஆக்ஸிலரேட்டர் உபகரணத்தை குடியரசுத்தலைவர் தொடங்கிவைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்து வைக்கும் அவர், புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
https://twitter.com/news7tamil/status/1687789145278795776
ஆகஸ்ட் 8, 2023 அன்று, ஆரோவில்லில், நகர கண்காட்சியான மணிமந்திரைப் பார்வையிடும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அங்கு மாநாடு ஒன்றையும் தொடங்கி வைக்கிறார்.







