கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப மண்டல கல்லூரி கல்வி இயக்குனரால் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக அரசு அறிவித்த 41 உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றும் அறிவிப்பை செயல்படுத்த அவர்கள் நிதி ஒதுக்கவில்லை. தற்போது இந்த உத்தரவை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வுக்கு 14,524 மாணவர்கள் அழைக்கப்பட்டதாகவும், அதில் 10,351 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் கூறிய அமைச்சர், 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 5648 பேர் Accept & Upgradeக்காக பணம் கட்டியுள்ளனர் எனவும், அந்த மாணவர்களுக்கும் நாளைக்குள் எந்த கல்லூரி என்ற உத்தரவு கிடைக்கப்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மண்டல கல்லூரி கல்வி இயக்குனரால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.







