மிக பிரமாண்டமாகவும் அதி நவீனமாகவும் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் இந்த புதிய நாடாளுமன்றத்தை கட்டட பணிகளை மேற்கொண்டது. மத்திய பாஜக அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டத்தின் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 28ஆம் தேதி திறப்பு விழா நடைபெறவுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள்:
- தற்போதைய நாடாளுமன்றத்திற்கு அருகே, 65,000 சதுர மீட்டர் பரப்பளவில், நான்கு தளங்கள் கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
- தற்போது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 ஆகவும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 245 ஆகவும் உள்ளது. புதிய கட்டடத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது.
- மாநிலங்களவையில் 384 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர வசதி உள்ளது. இந்நிலையில் புதிய கட்டிடத்தில் இரு அவைகளிலும் இருக்கைகள் எண்ணிக்கை கூட்டப்பட்டுள்ளது.
- மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- தேசிய மலரான தாமரையை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களவையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் நவீன ஆடியோ விஷுவல் வசதிகளுடன் கூடிய, பெரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகளும் உள்ளன.
- மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வர தேவையான அனைத்து வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது.
- பயங்கரவாத தாக்குதல் மற்றும் நிலநடுக்கம் மோன்ற இயற்கை பேரிடர்கள் என எதிலும் பாதிக்காத அளவுக்கு வலிமையுடன் நவீன மற்றும் தரமான தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.









