புதுச்சேரி ஜிப்மரில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று தினஙகளுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் கேரளாவிற்கு சென்று வந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த நபருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் எடுக்கப்பட்டு புனேவிற்கு அனுப்பபட்டது.
இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதியானதாக தகவல் பரவியது, இதனால் புதுச்சேரி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிகிச்சையில் இருந்தவர் முழுவதும் குணமடைந்து விட்டதாகவும், அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.







