கதையின் நாயகனாக உயர்ந்த ‘சூரி’ கடந்து வந்த பாதை

கடந்த வாரம் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் விமர்சனரீதியாகவும் , வசூல்ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, அந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்த நடிகர் சூரியின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில்…

கடந்த வாரம் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் விமர்சனரீதியாகவும் , வசூல்ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, அந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்த நடிகர் சூரியின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் திடீரென ஹீரோவாக நடிக்கிறாரே இதெல்லாம் அவருக்கு செட் ஆகுமா என்ற பலரது சந்தேகங்களையும் தனது நடிப்பின் மூலம் ‘விடுதலை’ படத்தில் தகர்த்தெறிந்து உள்ள நடிகர் சூரி, இப்போது மட்டும் அல்ல அவரது சினிமா வாழ்க்கையின் துவக்க காலத்திலிருந்தே பல விஷயங்களை தவிடுபொடி ஆக்கி தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு பல கஷ்டங்களையும், பல துயரங்களையும் எதிர்கொண்டுதான் சூரி என்கிற நபர் இன்று ஒரு நடிகனாக மெருகேறி பிரகாசித்து வருகிறார். அப்படிப்பட்ட சூரியின் வாழ்க்கை குறித்த சில அறியபடாத தகவல்களை தான் நாம இந்த தொகுப்பில் காண இருக்கிறோம்.

நடிகர் சூரி மதுரையில் உள்ள ராஜாக்கூர் என்கின்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் சேங்கையரசி தம்பதிக்கு பிறந்த ஆறு மகன்களில் ஒருவராக 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி பிறந்தவர். ஏழாம் வகுப்பு வரை தன் சொந்த ஊரிலேயே படித்து வந்த இவர், பின்னர் குடும்ப வறுமை காரணமாக எட்டாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். பொதுவாகவே நடிகர் சூரியின் தந்தை மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடியவர் என்பதோடு, சூரிக்கும் சிறுவயதிலிருந்தே நடிப்பிலும், நடனம் ஆடுவதிலும் மிகுந்த ஆர்வம் இருந்ததால் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு 1996-ம் ஆண்டு காலகட்டத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார்.

துவக்கத்தில் சினிமா துறையில் சேர்வது மிகவும் சுலபமாக இருக்கும் என நினைத்த சூரி, வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் சென்னை முழுவதும் சுற்றித் திரிந்த பின்பு தான் சினிமாவின் உண்மையான நிலையை உணர்ந்துள்ளார். மேலும் சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணம் தேவைப்பட்டதால் வேறு வழி இன்றி மணல் டிப்பர் லாரியில் கிளீனராகவும், பின்னர் சினிமாவில் அரங்குகள் அமைக்கும் போது பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும் சென்றுள்ளார்.

இந்த நேரத்தில், சென்னையில் இருந்த நண்பர்களுடன் இணைந்து காமெடி நாடகங்கள் போட துவங்கிய இவர், மந்திரவாசல் என்கின்ற நாடகத்தில் சிறிய வேடம் ஒன்றில் திருடனாக மேடையேறி முதன் முதலில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார். பின்னர் தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்த சமயத்தில் ஒருமுறை வீரப்பன் கதையை மையமாக வைத்து போடப்பட்ட நாடகத்தைப் பார்த்த காவல்துறையினர் 400 ரூபாய் பரிசாக அளித்து அவரை பாராட்டினார்களாம். இதனால் தொடர்ந்து உற்சாகமாக தனது இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த நடிகர் சூரி 1999-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். துவக்கத்தில் நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய இவர், 2000ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் திருமதி செல்வம், புஷ்பாஞ்சாலி, மைதிலி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார்.

இப்படி சின்னத்திரையில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்த சமயத்திலும் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், பல போராட்டங்களுக்கு பின்னரே வெள்ளித்திரையில் முகம் அடையாளம் காணும் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் குறிப்பாக, காதல், தீபாவளி போன்ற படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இவர் வந்தாலும் அடையாளம் காணக்கூடிய நபராக
தோன்றுவார். இதில் 2005-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ஜி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்த போது, அப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுசீந்திரனுடன் ஏற்பட்ட அறிமுகம், 2009 ஆம் ஆண்டு இயக்குனராக சுசீந்திரன் அறிமுகமாகி இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடிப்பதற்க்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இப்படத்தில் வரும் பரோட்டா காமெடி சூரியை உலகம் முழுவதும் பிரபலமாக்கியதோடு, அந்த படத்திலிருந்து பரோட்டா சூரி என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது.

தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், குள்ளநரிக் கூட்டம் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது நடிகர் சிவகார்த்திகேயனோடு இவர் இணைந்து நடித்த
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்தான். இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் பலரால் ரசிக்கப்படுவதோடு, 2014-ஆம் ஆண்டு மலேசியாவில் சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது நிகழ்ச்சியில் இவருக்கு முதல் விருதினையும் பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து, பாண்டிய நாடு, ஜில்லா, மான் கராத்தே, அஞ்சான், அரண்மனை 2, ரஜினிமுருகன் போன்ற பிரபலமான நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நேரத்தில் தான், 2018 ஆம் ஆண்டு சீமராஜா படத்தில் நடிப்பதற்காக தனது உடலை வருத்திக் கொண்டு சிக்ஸ் பக் வைத்துக் கொண்ட சூரி பலரது கவனத்தையும் ஈர்த்தார். ஒரு பேட்டியில் தனது பிட்னஸ் குறித்து நடிகர் சூரி பேசும் போது, ஒரு நடிகருக்கு உடம்பு மிகவும் முக்கியம்… உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு நாயகனுக்கு நண்பனாக நடிக்க முடியும். அதனால் தான் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து உடம்பை பராமரித்து வருகிறேன் என்று கூறி இருந்தார்.

சொல்லப்போனால் தற்போது விடுதலை படத்தில் நடித்துள்ள நடிகர் சூரிக்கு இதே கட்டுக்கோப்பான உடல் பராமரிப்பு காரணமாகத்தான் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக பல பேட்டிகளில் படத்தின் இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

இப்படி விடா முயற்சி, காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் பண்பு போன்ற விஷயங்களை தாண்டி, எந்த சூழ்நிலையிலும் தான் கடந்து வந்த பாதையையும், தனது சொந்தங்களையும் மறவாத நபராக நடிகர் சூரி தற்போதும் இருந்து வருகிறார். அந்த வகையில் சூரியுடன் பிறந்த ஐந்து சகோதரர்களும் இன்றுவரையும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், இவர் மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு வெண்ணிலா, சர்வான் என்கின்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. என்னதான் சினிமாவில் சூரி மிகவும் பிஸியாக இருந்தாலும் ஆண்டுதோறும் தனது சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில் நடக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்று குயிலாட்டம் ஆடும் இவர், தனது சொந்தங்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவே மாட்டாராம்.

மேலும், உன்ன நல்ல உணவு கூட இல்லாத நேரத்தில் நாம நல்ல நிலைக்கு வந்தால் குறைந்த விலையில் நல்ல தரமான உணவை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்
என ஆசைப்பட்ட நடிகர் சூரி, அதை நிறைவேற்றும் விதமாக அம்மன் ரெஸ்டாரன்ட் மற்றும் அய்யன் ரெஸ்டாரன்ட் என்ற இரண்டு ஹோட்டல்களை துவங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இதற்கிடையே நண்பர்களால் துரோகம், ஐடி ரெய்டு போன்ற பல சிரமங்களை இவர் சந்தித்த போதும், கஜா புயலின் போது டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்த நடிகர் சூரி, சமீபத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடக நடிகர்களுக்கு நடிகர் சங்கத்தின் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி உதவி கரம் நீட்டினார் . இப்படி நடிப்பிலும், பண்பிலும், பிறர் மீது அன்பு காட்டுவதிலும் மிகச்சிறந்த மனிதராக நடிகர் சூரி விளங்குவதினால் தான் கடந்த 2019-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு இவரை பெருமைப்படுத்தியது. மேலும் , நகைச்சுவை கலைஞனாக இருந்த சூரியை இன்று கதையின் நாயகன் என்ற அந்தஸ்திற்கும் உயர்ந்து நிற்க வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.