கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘தி ஒடிசி’. ஹோமர் என்பவரால் எழுதப்பட்ட கிரேக்க புராணமான ‘ஒடிசி’-யை அடிப்படையாகக் கொண்டு உருவக்கப்பட்ட இப்படத்தை யூனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
டிரோஜன் போருக்குப் பிறகு இதாகா (Ithaca) நகருக்குத் திரும்பும் மன்னர் ஒடிஸியஸ், புராண காலத்து உயிரினங்கள், ஆபத்தான சவால்கள் மற்றும் தடைகளை எதிர்கொண்டு மேற்கொள்ளும் அபாயகரமான பயணமே இப்படத்தின் கதையாகும்.
இப்படத்தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரான், லுபிடா நியாங்கோ, ஜெண்டயா, ஜான் பெர்ன்தால், ஹிமேஷ் படேல், ஜான் லெகுயிசாமோ மற்றும் மியா கோத் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் நேற்று (ஜூலை 17) வெளியான தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தி ஒடிசி திரைப்படத்தின் இந்திய வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ. 20 கோடி வரை வசூலித்துள்ளது.
ஆங்கிலப் பதிப்பு மட்டும் சுமார் ரூ. 13.75 கோடி வசூலை ஈட்டியுள்ளது. மற்ற மொழிப் பதிப்புகளில் (dubbed versions), இந்திப் பதிப்பு சுமார் ரூ. 1.90 கோடியையும், தெலுங்குப் பதிப்பு சுமார் ரூ. 1.10 கோடியையும் தமிழ் பதிப்பு ரூ. 65 இலட்சத்தையும் ஈட்டியுள்ளன.




