சுற்றுலா பயணிகளை கவரும் “பறக்கும் உணவகம்”!

இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலமான மணாலி பகுதியில் முதல் முறையாக ‘பறக்கும் உணவகம்’ திறக்கப்பட்டுள்ளது.  இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்தியாவின் வடக்கு பகுதி அழகான மலைப் பிரதேசங்களை உள்ளடக்கியது. அதில்…

இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலமான மணாலி பகுதியில் முதல் முறையாக ‘பறக்கும் உணவகம்’ திறக்கப்பட்டுள்ளது.  இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தியாவின் வடக்கு பகுதி அழகான மலைப் பிரதேசங்களை உள்ளடக்கியது. அதில் ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் பகுதிகளாக விளங்குகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தின் பியாஸ் ஆற்று பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மணாலி பகுதி சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது.

இங்கு இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுவித முயற்சியாக ‘பறக்கும் உணவகம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உணவகம் அந்தரத்தில் உணவு உண்ணும் அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பறக்கும் அனுபவத்தையும் வழங்குகிறது. 160 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள இந்த உணவகம் கிரேன் உதவியுடன் காற்றில் நிறுத்தப்பட்டுள்ளது. இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே உடனடி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இமாச்சல பிரதேச கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் நேற்று இங்குள்ள உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார். மாநிலத்தில் இந்தப் புதிய முயற்சியைத் தொடங்கியதற்காக உணவகத்தின் உரிமையாளரான தமன் கபூரை வாழ்த்தினார். இது ஒரு சாகச அனுபவம் என்றும், சிம்லா மற்றும் தர்மசாலாவிலும் இதுபோன்ற உணவகங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது நாட்டிலேயே 12-வது உணவகமாகவும், மாநிலத்திலேயே முதல் உணவகமாகவும் திகழ்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.