சீனாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு சிறுவனுக்கு H3N8 பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
சீனாவின் ஊகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றது. இந்நிலையில், சீனாவிற்கு புதிய விருந்தாளியாக பறவைக் காய்ச்சல் உருவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹெனான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது H3N8 வகை பறவைக் காய்ச்சல் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (NHC) தெரிவித்துள்ளது. காய்ச்சல் அறிகுறிகளுடன் சென்ற அந்த சிறுவனக்கு H3N8 வகை பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறுவனின் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இந்த வகை தொற்று மக்களிடையே பரவுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் வைரஸாக H3N8 வகை பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. சிறுவன், வீட்டில் வளர்க்கப்படும் கோழி மற்றும் பறவைகளிடம் பழகி வருவதால் இந்த வகை தொற்று ஏற்பட்டிருக்குமோ என அந்நதாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.








