விருதுநகரில் மதுபானக்கடை காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு மதுபாட்டில்களை திருடிச்சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் கலைஞர் நகரை சேர்ந்த மோகன் மூர்த்தி ராஜன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில், கடைக்குள் நுழைந்த 4 பேர் மதுபானம் கேட்டு கத்தியை காட்டி மோகன் மூர்த்தி ராஜனை மிரட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவலாளியின் தலையில் அரிவாளால் வெட்டிய அவர்கள், கடையின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த 50 மது பாட்டில்களையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெட்டுப்பட்ட காவலாளியை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருந்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். காவலாளியை தாக்கிவிட்டு மதுபாட்டில்களை கொளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







