சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது!

சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது.

சேலம் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த நிலையில்
கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்தார். அப்போது தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.

முன்னதாக கூட்டத்திற்காக தவெகவினருக்கு காவல்துறை தரப்பில் இருந்து 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் வேனில் நின்றபடி மட்டுமே பேச வேண்டும், இருக்கைகள் அமைக்கக்கூடாது. கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர யாருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.