சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணா நடித்துள்ள தி லெஜண்ட் படம் வருகிற 28ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான இவர் சினிமாவில் கால் பதித்துள்ள முதல் படம் ‘தி லெஜண்ட்’. ஜே.டி – ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மறைந்த விவேக், பிரபு, நாசர், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
லெஜண்ட் சரவணாவே பிரமாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் மோசன் போஸ்டர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாக சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் சரவணன். படம் இந்த மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தை வருகின்ற 28ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தி லெஜண்ட் சரவணா படக்குழுவினர் கூறுகையில், “சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளோம். சென்ஸார் இந்த வாரத்தில் கிடைத்துவிடும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் கோபுரம் பிலிம்ஸ் படத்தை வெளியிட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.” என்றனர்.
-ம.பவித்ரா








