மறைந்த இங்கிலாந்து இளவரசியின் கார் ரூ.6.10 கோடிக்கு விற்பனை

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கருப்பு நிற கார் இந்திய ரூபாய் மதிப்பில் 6.10 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.   மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா 1980-களில் பயன்படுத்திய கார் விற்பனை செய்வதற்காக நேற்று…

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கருப்பு நிற கார் இந்திய ரூபாய் மதிப்பில் 6.10 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

 

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா 1980-களில் பயன்படுத்திய கார் விற்பனை செய்வதற்காக நேற்று ஏலம் நடைபெற்றது. இதில் அவரது கார் 6,50,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகியுள்ளது.

 

இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.10 கோடி ரூபாய்க்கு டயானாவின் கார் விற்பனையாகியுள்ளது. 1980-களில் இளவரசி டயானா கறுப்பு நிற ஃபோர்டு எஸ்கார்ட் (Ford Escort) காரை பயன்படுத்தி வந்தார். டயானாவின் 25-ஆவது நினைவு தினம் வருகிற 31-ம் தேதி அனுசரிக்கப்படுவதால், லண்டனில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அவரது கார் விற்பனை செய்யப்பட்டது.

 

சில்வர்ஸ்டோன் ஆக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. ஏலத்தில் டயானாவின் காரை வாங்க மிக கடுமையான போட்டி இருந்ததாக சில்வர்ஸ்டோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனை விலையையும் தாண்டி கூடுதலாக 12.5% தொகை செலுத்தி இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் டயானாவின் கருப்பு நிற காரை வாங்கியுள்ளார்.

இளவரசி டயானா 1997ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் கார் விபத்தில் உயிரிழந்தார். உலகெங்கும் டயானாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மேலும் அவர் ஏலத்தில் விற்பனையான ஃபோர்டு எஸ்கார்ட் காருடன் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த ஃபோர்டு எஸ்கார்ட் காரை டயானா மிகவும் விரும்பி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

மேலும், சம்பந்தப்பட்ட ஃபோர்டு எஸ்கார்ட் மாடல் வெள்ளை நிறத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், டயானாவுக்காக மட்டும் அது கருப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் அந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.