முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் இன்றும் வருமான வரித் துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களின் இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும், வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களின் இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும், வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர் சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனையை தொடங்கியது. அதேபோல சந்திரசேகர் இயக்குநராக பங்கு வகித்த கே.சி.பி. இன்ஜினியரிங் நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முக்கியமாக கே.சி.பி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் அதிக அளவுக்கு பணிகள் எடுத்த காரணத்துக்காக, கே.சி .பி சந்திபிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில், வேலுமணி தொடர்புடைய மற்றொரு இடத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.

கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேற்று இரவு அவர் வீட்டில் சோதனை நடத்தியதற்கு அவரின் உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேபோல கே.சி.பி நிறுவனம் மற்றும் சந்திரபிரகாஷ் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித் துறை சோதனை இன்றும் தொடர்கிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.