நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் I.N.D.I.A. கூட்டணியோடு ஒருங்கிணைந்து குரல் எழுப்ப முடிவு: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக “இந்தியா கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவது என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. திமுக எம்பிக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்…

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக “இந்தியா கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவது என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திமுக எம்பிக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

“கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை துவக்கி வைத்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்டுகிறது.

காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும் என கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல், 2-வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்யவில்லை. முதலமைச்சர் பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்று வரை ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும். இந்த சிறப்பு கூட்டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, தற்போது “இந்தியா கூட்டணிக்கு அஞ்சி “பாரத்என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் – முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசை, நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.