தாமிரபரணி ஆற்றில் ஒரு மாத காலத்தில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் என்பவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சின்ன சங்கரன் கோயில் ஆற்றில் இன்று குளிக்கும் போது நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். அவரை தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 24 வயதான ஷிபானா என்பவர் உயிரிழந்தார். திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆன நிலையில் இந்த கோர நிகழ்வு நடந்தேரியுள்ளது.
அதேபோன்று கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த திவ்யா மற்றும் ராகுல் என்கிற சகோதரனும் சகோதரியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஸ்வரன் என்பவர் ஆலடியூர் ஆற்று பாலம் அருகில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய நிலையில் உயிரிழந்தார்.
கடந்த மாதம் ஜூலை 21 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இவ்வாறு ஆண்டுதோறும் நடைபெறும் தொடர் உயிரிழப்புகளை தடுக்க தாமிரபரணி ஆற்றில் அதிகமான ஆழம் மற்றும் சுழல் நிறைந்த பகுதிகளை கண்டறிந்து அறிவிப்பு பலகை வைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக தீயணைப்பு துறையினர் பகிர்ந்து கொண்ட தகவல்களாவது:
ஆழம் பற்றி தெரிந்து கொள்ளாமல் குளிக்க முற்படுவதால் உயிரிழப்புகள் நேர்கிறது.
நீச்சல் தெரியாமல் நீர்நிலைகளில் குளிக்கும் போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
மது அருந்திவிட்டு ஆற்றில் குளிக்கும் போது ஆழமான பகுதிகளிலிருந்து நீந்தி வெளியே வர முடியாமல் உயிரிழப்பது.
இந்த மூன்று காரணங்களுமே தாமிரபரணி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட பிரதான காரணமாக இருப்பதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







