டிடிவி தினகரனையும், தங்கதமிழ்ச்செல்வனையும் யார் குரு, சிஷ்யன் என சொன்னது. அந்த மாதிரி ஒன்றும் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரனை ஆதரித்து, அவரின் மனைவி அனுராதா டிடிவி தினகரன் பல்வேறு பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராதா டிடிவி தினகரன் கூறியதாவது:
“எல்லா இடங்களிலும் டிடிவி தினகரனுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. மக்கள் அவரை
மறக்கவே இல்லை. நீங்கள் வந்தால் போதும் நீங்கள் தான் ஜெயிக்க வேண்டும் என
சொல்கின்றனர். குக்கர் சின்னம் நல்லபடியாக ரீச் ஆகி வருகிறது. மக்கள் அவரை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
நாங்களும் குக்கர் சின்னம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். டிடிவி தினகரனையும், தங்கதமிழ்ச்செல்வனையும் யார் குரு, சிஷ்யன் என சொன்னது. அந்த மாதிரி ஒன்றும் இல்லை. மக்களிடமும் அந்த மாதிரி எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.
வரலாற்றிலேயே அதிக வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள்
உழைத்துக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக அது நடக்கும் என நம்பிக்கை உள்ளது.
மக்கள் அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர்.”
இவ்வாறு அனுராதா டிடிவி தினகரன் பேசினார்.







