மாட்டுக்கறி குறித்து சர்ச்சை: பதிவை நீக்கிய சென்னை மாநகர காவல் துறை

மாட்டுக்கறி தொடர்பான டுவிட்டர் பதிவு “தேவையற்ற பதிவு” என சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்யத் தொடங்கினார். அதையடுத்து, தனது…

மாட்டுக்கறி தொடர்பான டுவிட்டர் பதிவு “தேவையற்ற பதிவு” என சென்னை பெருநகர
காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்யத் தொடங்கினார். அதையடுத்து, தனது பதில் பதிவை சென்னை காவல் துறை டுவிட்டரில் இருந்து நீக்கியது.

அபூபக்கர் என்பவர் “மாட்டுக் கறி” என குறிப்பிட்டு மாட்டுக்கறியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவின் கீழ், பெருநகர சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து “இது தேவையற்ற பதிவு” எனவும், “தேவையற்ற பதிவுகளை தவிர்க்கவும்” என்பது போன்ற பதில்கள் பதிவிடப்பட்டிருந்தது.

காவல்துறையின் இந்தப் பதிவிற்கு டுவிட்டர் கணக்கில் மாட்டுக் கறி உண்ணுவது
குற்றமா? என பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வந்த நிலையில், சர்ச்சை
கிளம்பியது.

தர்மபுரி திமுக எம்.பி.யான செந்தில் குமார் வெளியிட்ட பதிவில், “இந்த ஐ.டியை யார் நிர்வகித்து வருவது. அந்த பதிவில் என்ன தப்பு. என்ன பதிவிட வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல் துறையினர் எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

காவல் ஆணையர் விளக்கம்

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் கேட்டபோது,
“இது தவறுதலாக நடந்தது. இதுதொடர்பாக சென்னை காவல் துறை தரப்பில் உரிய
விளக்கம் அளிக்கப்படும்” தெரிவித்தார். இதனை அடுத்து சர்ச்சைக்குரிய பதிவு தற்போது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


மேலும் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான
விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “தாங்கள் (அபுபக்கர்) பதிவிட்ட டுவீட் சென்னை காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ரீடுவீட் செய்யப்பட்டதால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக “தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்” என பதில் அளித்து இருந்தோம். ஆனால் தவறுதலாக அந்த பதில் தங்களுடைய பக்கத்திலேயே
பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவு தேர்வினை
குறித்ததல்ல” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் எதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கிலிருந்து இவ்வாறு
பதிலளிக்கப்பட்டது என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த சென்னை
காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.